Saturday, October 27, 2007

புத்தகம் மூடிய மயிலிறகு

வாழ்க்கையில் காதல் என்ற ஒன்று சுவாரசியமானது என்றால்... முதல் காதலைப் போல சுவாரசியமானது வேறென்ன இருக்க முடியும்... எனது முதல் காதலைப் பற்றியும் காதலியைப் பற்றியும் பேசுவதென்றால்..கொள்ளைப் பிரியம் எனக்கு.... ஆமாம்..புத்தகம் மீதான காதல்... புத்தகங்களோடு கொண்ட உற‌வுகளை அசைபோடுவதென்பது.... ஞாபக முடிச்சுக்களைப் பிடித்துக் கொண்டு இதயப் பள்ளத்தாக்கில் இறங்குவதைப் போல ஒரு அனுபவம்... படிப்பு என்பதொன்றும் என் பாட்டன் வீட்டு சொத்தல்ல... பிறகு எது என்னை புத்தகங்களின் பால் ஈர்த்தது... என் இதயத்தில் புத்தக வாசனையைச் சேர்த்தது என்று நிறைய சமயங்களில் மனம் பின்னோக்கி ஓடுவதுண்டு... சரி இப்போதேனும் விடைதேடிச் செல்வோம்...

காவிரியாற்றங்கரையில் ஒரு சின்னஞ்சிறிய கிராமம் எங்கள‌து...எல்லா கிராமத்துச் சிறுவர்களையும் போல பாடப் புத்தகத்துக்குள் குட்டி போடும் என்று மயிலிறகையும், புத்தி வர வேண்டும் என்று அரச இலையையும் சேர்த்து வைத்த யதார்த்தப் பிள்ளைப்பருவம் தான் எனக்கும்... புத்தகம் வாசித்தல் என்பது என்னளவில் அப்பொழுது சிறுவர் மலரில் வரும் புராணக்கதைகள் தாம்... பாடப்புத்தகங்களுக்கு நடுவில் சமயம் கிடைக்கின்ற போதெல்லாம் நான் வாசிக்கத் தொடங்கிய புத்தகங்கள் அவை தாம்.. இடையில் பள்ளி இறுதி ஆண்டுகளில் தேர்வு நோக்கியே சிந்திக்கின்ற சாமன்ய மனிதர்களில் ஒருவனானதால் புத்தகங்கள் குறித்த சிந்தனை என் மனதில் எழுந்திருக்க எத்தனை சதவீத வாய்ப்புக்கள் இருந்திருக்க முடியும் என்று எளிதாய் எல்லாரும் யோசித்து விட முடியும்...

க‌ல்லூரியில் இள‌ம்ப‌ட்ட‌ வ‌குப்புக்க‌ளில் சேர்ந்த‌ பின்ன‌ர் நாம் ஏன் புத்த‌க‌ங்க‌ள் வாங்கி வாசிக்க‌க் கூடாது என்ற‌ எண்ண‌ம் என்னுள் எழுந்த‌து... புத்த‌க‌ங்கள் வாசிக்க‌ வேண்டும் என்ற‌ எண்ண‌ம் தோன்றி விட்டாலும்... யாருடைய புத்தகங்கள்... எதை வாசிப்ப‌து என்ற‌ எந்த‌ இல‌க்கும் இல்லாது தொடங்கிற்று என‌து வாசிப்பு ப‌ய‌ண‌ம்... நூல‌க‌த்தில் சேர்ந்து ப‌டிக்க‌லாம் என்ற‌ என‌து முயற்சி ப‌டுதோல்வியில் முடிந்த‌தால்.. நாமே சொந்த‌மாக‌ காசு கொடுத்து தான் புத்த‌க‌ங்க‌ள் வாங்க‌ வேண்டும் என்ற‌ எண்ண‌ம் என்னுள் தோன்றிய‌து... இதுவும் கூட‌ இல‌க்கு அறியாத‌ முடிவுதான்.. ஏனென்றால்... என்னிட‌ம் அப்போது ச‌ட்டைப்பையில் எத்த‌னை காசுக‌ள் இருந்த‌ன‌ என்று கூட‌ நான் "எண்ணிப்" பார்க்க‌வில்லை...

புத்தகம் வாங்குவதற்கு கொடுத்த விலைகளை எண்ணிப் பார்க்கிற போதெல்லாம் கனத்துப் போகும் என் மனசு... 20 ரூபாய் புத்தகம் என்றால் ஒரு நாள் மதிய உணவை விலையாக கொடுத்த பொழுதுகள் அவை...முத‌ன் முத‌லாக‌ ஒரு புத்த‌க‌த்தை வாஙகிய‌ பிற‌கு நான் அதைப் ப‌டித்த‌தை விட‌ அழ‌குபார்த்து ரசித்ததும், வந்தோர் போனோரிடம் எல்லாம் பாரபட்சமின்றி காட்டிக் காட்டி பெருமைப்பட்டதும் தான் அதிக‌ம்...எனது இந்த தொல்லை நாளுக்கு நாள் அதிகரிக்கத்தொடங்கியதில் என்னைக் கண்டதும் கூட நிறைய பேர் எதையோ வீட்டில் மற‌ந்து வைத்துவிட்டு வந்தவர்கள் போல அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் எடுக்கத்தொடங்கினார்கள்...

தினமும் பட்டினி கிடந்து நான் புத்தகம் வாங்கும் செய்தி என் தந்தையின் காதுகளுக்கு எட்டியதும் அவர் உடனடியாக செய்த வேலை எனக்கு வீட்டில் இருந்தே உணவு எடுத்துச் செல்லுமாறு உத்தரவு பிறந்தது... சற்றும் மனம் சலிக்காது எனது அடுத்த முயற்சியில் இறங்கலானேன்... பயணத்திற்கு கொடுக்கும் காசுகளை மிச்சம் பிடித்து கட்டை வண்டியிலும் மொட்டை வண்டியிலும் தொற்றிக் கொண்டு பயணித்து எனது லட்சியக் கனவை நிறைவேற்றிக்கொண்டேன்.. அடுத்த அடி காத்திருந்தது எனக்கு... அது மாதாந்திர பயண அட்டை வாங்கி கொடுத்தது தான்...என்ன செய்யலாம் என்ற என் மூளையின் யோசனைகளால் அவர்களுக்கு அடுத்த தொல்லை காத்திருந்தது...

பண்டிகை நாட்களில் கொடுக்கப் படும் அன்பளிப்பு பணத்திற்காக காதிருக்க தொடங்கினேன்... காலில் விழுந்தால் காசு என்கிற மாபெரும் "அரசியல்" சூத்திரம் எனக்கு விளங்கியதும்... (புத்தகம் மீதான) காதலுக்காக காலில் விழுவது தப்பே இல்லை என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டு வேட்டையில் இறங்கினேன்... பண்டிகை நாட்களில் எங்கள் வீட்டில் கூடுகிற கூட்டத்தால் என் அலமாரியின் அடுக்குகள் அரங்கு நிறைந்த காட்சியாக ஓடும் தீபாவளி வெளியீடைப் போல நிறைய தொடங்கிய காலம் அது... புத்தக வெறியில் பொத்து பொத்தென்று நான் விழும் சேதி கேட்டு அடுத்த பண்டிகைக்கு வீடு வெள்ளிக்கிழமை கசாப்பு கடையைப் போல ஆனது... உபயம் சாட்சாத் நானே தான்...

வைரமுத்துவின் கவிதைகளோடு தொடங்கிய எனது பயண‌த்தின் பாதை மேத்தா, கண்ணதாசன், பாவேந்தர், பாரதி, என்று விரியலாயிற்று.. பின்னர் நாவலாற்றங்கரைப் பக்கம் ஒதுங்கத் தொடங்கினேன்.. கட்டுரைகள், சுய முன்னேற்ற நூல்கள் என்று வகைக்கு சிலவற்றை வாங்கி வாசிக்கத் தொடங்கினேன்...

புத்தகங்களொடு தொடர்புடைய வேறு சுவாரசியமான சம்பவங்களும் நிகழ்ந்தன...அவற்றையும் நானிங்கே சொல்லியே ஆக வேண்டும்... முதன் முதலாக என்னிடமிருந்து புத்தகம் வாங்கிச் சென்ற ஒருவர் புத்தகத்தின் மூலையை மடித்து மடித்து படித்ததால் மூலை மட்டும் தனியே வந்து விட.. கொழகொழப்பான ஏதோ ஒன்றைத் தடவி(அது எச்சிலா என்று இன்று வரை தெரியவில்லை) ஒட்டிக் கொடுத்து விட்டார்... என் கண்களில் இருந்து ரத்தம் வராத குறை ஒன்று தான்... அப்போது முடிவெடுத்தது தான்.. இனி இவ‌ருக்கு புத்தகம் கொடுப்பதில்லை என்று...
உடனடியாக அந்த புத்தகத்தின் மீது எழுதினேன் இப்படி..

"இந்த காகிதப் பூக்களின்
காது மடல் திருகாதீர்... அது
என் கார்டியாக் கூட்டை
கசக்கி எறிவதைப் போல" என்று

பின்னர் என்னிடம் இரவல் வாங்கி சென்ற‌ பலரது முகவரிகளே இன்றும் தேடிக் கொண்டு இருக்கும்படி செய்து அடுத்த முடிவை எடுக்க வைத்தனர்.. அது வேறொன்றும் இல்லை யாருக்குமே புத்தகம் தருவதில்லை என்பது தான்..

பின்னர் வயதும் முந்தைய அனுபவங்களும் சொல்லித்தந்த பாடங்கள் காரணமாய், புத்தகங்களுக்காக பகுதி நேரமாய் வாரக் கடைசிகளில் வேலை செய்ய ஆரம்பித்தேன்... வாழ்க்கை என் பாதைகளில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்திய பின்னரும் புத்தகம் வாசிக்கின்ற காதல் குறையவேயில்லை... பா.விஜய், அறிவுமதி, யுகபாரதி, தாமரை, நா.முத்துக்குமார் என்று சமகாலக் கவிஞர்களின்மேல் நாட்டம் வளர்ந்தது...

என்னைக் கண்டு ஓடியவர்கள் என்னை நோக்கிவரத் தொடங்கிய காலம் அது.. நான் கம்பனில்லை என்று தெரிந்தே என்னை புரந்த சடையப்ப வள்ளல்களை நான் சந்தித்தேன்... புத்தகம் குறித்த சிந்தனைகளை தெளிவுபடுத்திக்கொள்ளத் தொடங்கினேன்... இலக்கியம், கவிதை, என்ற ஒரே கோட்டில் செல்லாமல் சினிமா, வரலாறு, சமகாலச் சிந்தனைகள் என்று பாதை இன்னும் விரிந்துகொண்டே இருக்கின்றது... இப்போதெல்லாம் என் படுக்கையறையில் என் தலையணையில் என்னோடு சேர்ந்து உறங்கும் மற்றொரு ஜீவனாகவே ஆகி விட்டது புத்தகம்...

இதயம் என்ற கண்ணாடிப் புட்டிக்குள் சேகரம் செய்துவைக்கும் எந்த உண‌ர்வுகள் ஆனலும் சரி... இறக்கி வைக்காவிடில் ஒரு நாள் அழுத்தம் தாங்காமல் வெடித்துவிடும் என்பதால் எனது சுகமான காதல் சுமைகளை கொஞ்சம் இறக்கி வைத்திருக்கிறேன்...

இதை எல்லாம் சொல்வதால் யாரும் என்னை பெரிய படிப்பாளி என்று காட்டிக் கொள்ள எடுத்த முயற்சியாக எண்ண வேண்டாம்...
எனது முதல் எழுத்து கூட எதை நான் மிகவும் நேசிக்கிறேனோ, எதை நான் பெறப் போராடினேனோ.... எதை இன்றும் இதயத்திற்கு அருகில் வைத்திருக்கிறேனோ அதை பற்றியதாகத் தான் இருக்க வேண்டும் என்று எண்ணினேன்... எழுதினேன்...அவ்வ‌ள‌வே...

கால‌ம் என்னை புத்த‌க‌ங்க‌ளொடு பிணைத்து வைத்திருக்கும் வ‌ரையில், வாசிப்பேன்... சிந்திப்பேன்...அதில் கொஞ்ச‌ம் இங்கேயும் சிந்துவேன்...

2 comments:

Unknown said...

Starting itself very nice....
Cute beginning of ur travel....

muthu said...

Hi Krishna , as a friend i know your talents . I really appreciate the step you have taken , I wish you all the very best for your journey..