Monday, February 25, 2008

இரண்டும் இரண்டும் இருபத்திரண்டு

எனது பள்ளி நாள் தோழியை பல ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் சந்திக்க நேர்ந்தது.. பரபரப்பின் உச்சமான சென்னை மாநகரத்தின் தெருவொன்றில் அதே பரபரப்பிற்கு கொஞ்சமும் குறைவின்றி ஓடிக்கொண்டிருந்தவளை அடையாளம் கண்டுபிடித்து நிறுத்தி பேசத்தொடங்கினேன்... பொதுவான பரஸ்பர விசாரிப்புகளை அடுத்து தனது கையில் இருந்த அவளது குழந்தையை எனக்கு அறிமுகப் படுத்தினாள்.. சுமார் இரண்டு வயதிருக்கும் அந்தக் குழந்தைக்கு... அந்த வயதுக்கே உரிய துருதுருப் பார்வையோடு இருந்தது... நான் அந்தக்குழந்தையோடு பேச ஆரம்பிக்கும் போதே தனது பரபரப்பின் காரணத்தை விளக்கத் தொடங்கினாள் அவள்..

"இவனுக்கு அட்மிஷன் இருக்கு..அதுக்காக தான் ஓடிகிட்டே இருக்கேன் என்றாள்..." ஆச்சர்யம் மேலிட இந்தப் பையனுக்கு எத்தனை வயசாகுது என்று கேட்கலானேன்..எனது அந்தக் கேள்வியின் தொடர்ச்சியாய் எனக்கு காத்திருக்கும் அதிர்ச்சியான தகவல்களை அறியாதவனாய்... இவனுக்கு ரெண்டு வயசு முடிஞ்சு ரெண்டு மாசம் ஆச்சு.. என்றாள்... "அதற்குள் எதற்காக பள்ளியில் சேர்க்க வேண்டும்..அதுவும் இத்தனை பரபரப்பாக எதற்காக ஓட வேண்டும் என்ற என் கேள்விகளுக்கு ஒவ்வொன்றாய் அவள் பதில் சொல்லத்தொடங்கினாள்.. " இதுக்கே அட்மிஷன் கிடைக்க எவ்ளோ கஷ்டம்னு உங்களுக்கு தெரியாது. நாளைக்கு இன்டர்வியு வேறு இருக்கு.." என்றாள்.. இரண்டு வயதுக் குழந்தையிடம் என்ன நேர்முகத்தேர்வு செய்வார்கள்?? எனது குழப்பத்தைக் கண்டவளாய் அவளே அதற்கும் பதில் சொன்னாள்.."இன்டர்வியு இவனுக்கு இல்ல... எனக்கும் இவங்க அப்பாவுக்கும் தான் என்று.." அதிர்ச்சி அலை முகத்தில் ஓங்கி அறைந்தது எனக்கு... இவனைப் பள்ளியில் சேர்ப்பதற்கு உங்கள் இருவரிடமும் என்ன கேட்கப் போகிறார்கள்?? என்றேன் அதிர்ச்சியில் இருந்து மீளாமல்... "நாங்க எப்படி சொல்லிக்கொடுப்போம் வீட்டுலனு கேப்பாங்க.." என்றாள்.. இதென்ன பைத்தியக்காரத்தனம்..பள்ளியில் சேர்ப்பதே சொல்லிக் கொடுக்கத்தானே..அதை நீங்களே செய்துவிட்டால் பிறகு அவர்கள் என்ன செய்வார்கள் என்ற‌ என் கேள்வி அவளை எரிச்சல் அடையச் செய்திருக்கலாம்..அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் "இது சிட்டிலயே பெரிய ஸ்கூல்..அதுவும் இல்லாம ரைம்ஸ் எல்லாம் நல்லா சொல்லித்தராங்க.." என்று பொறுமையாக விளக்கம் சொல்லிக்கொண்டே போனாள்... இவ‌ன் கூட‌ ந‌ல்லா ரைம்ஸ் எல்லாம் சொல்லுவான்..என்று சொல்லிய‌வ‌ள்.."அங்கிளுக்கு ஒரு ரைம்ஸ் சொல்லிக்காட்டு என்றாள்... ம‌ழ‌லை மாறாத‌ அந்த‌ப் ப‌ச்சைக் குழ‌ந்தை

"ரெயின் ரெயின் கோ அவே... க‌ம் அகைன் அன‌த‌ர் டே..." என்று சொல்ல‌த்தொட‌ங்கிய‌து...

காவிரித்த‌ண்ணீருக்காக‌ க‌ர்நாட‌க‌ மாநில‌த்திட‌ம் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் த‌மிழ‌க‌த்தில்..
வ‌ருகிற‌ ம‌ழையையும் வ‌ராதே என்று பாட, பிள்ளைக‌ளுக்கு சொல்லிக்கொடுக்கிற‌ ப‌ள்ளிக்குத்தான் இத்த‌னை போராட்டமா??? என்று நான் ம‌ன‌துக்குள் புழுங்கிக் கொண்டிருப்ப‌தை அறியாம‌ல், "பாத்தீங்க‌ளா..இதுக்கு தான் இவ்ளோ க‌ஷ்ட‌ப் ப‌ட‌ற‌தும்..." என்றாள்.. கடைசியாக‌ அவ‌ளிட‌ம் ஒன்றைக் கேட்டே தீருவ‌து என்று தீர்மானித்த‌வ‌னாய்.."அப்ப‌டியே இருந்தாலும் இந்த‌க் குழந்தைக்கு ரெண்டு வ‌ய‌சு தானே ஆகுது.. மூணு வ‌ய‌தில் தானே எல்.கே.ஜி யில் சேர்ப்பார்கள்???" என்று கேட்டேன்.. அதிர்ச்சியின் எல்லைக்கே நான் சென்று விழும்ப‌டி ஒரு ப‌தில் வ‌ந்த‌து அவ‌ளிட‌மிருந்து... "இது எல்.கே.ஜி அட்மிஷ‌ன் இல்ல‌... ப்ரீ.கே.ஜி அட்மிஷ‌ன்.. அப்டியே விட்டுடா அவ‌ங்க‌ளே எல்.கே.ஜி ல‌ போட்டுடுவாங்க" என்று ச‌ர்வ‌சாதார‌ண‌மாய் ப‌தில் சொன்னாள்... "ந‌ம்ம‌ காலம் எல்லாம் வேற‌ங்க‌...இதுக்கே நான் மூணு நாளா வ‌ரிச‌யில‌ நின்னு இன்னிக்கு தான் கெட‌ச்சிருக்கு என்றபடி தனது ஓட்டத்தை தொடரலானாள்...அத‌ற்கு மேலும் அவ‌ளிட‌ம் பேச‌ எதுவும் தோன்றாம‌லும், விரும்பாம‌லும் பேசாது இருந்தேன்..இருந்தாலும் க‌டைசியாய் அவ‌ள் சொல்லிப்போன‌ வ‌ரி என்னை பின்னோக்கி அழைத்துச் சென்ற‌து...

ஐந்து வ‌ய‌தில் என்னை ஒன்றாம் வ‌குப்பில் சேர்ப்ப‌த‌ற்காக‌ ந‌ட‌ந்த‌ நிக‌ழ்வுக‌ளை எல்லாம் ம‌ன‌சு அசைபோடத் தொட‌ங்கிய‌து.. வீட்டில் பெரிய‌வ‌ர்க‌ள் பார்த்த‌ நாள் ஒன்றில் தெருவே அதிரும் ப‌டியாக‌ நான் போட்ட‌ கூப்பாடுக‌ளுக்கும், கால்க‌ளையும் கைக‌ளையும் உதைத்துக் கொண்டு "நான் போமாட்டேன்..போமாட்டேன்... என்ன‌ விடுடா..என்ன விடுடி" (அந்த‌ நேர‌த்தில் என்னிட‌ம் ம‌ரியாதை எதிர்பார்ப்ப‌து த‌வ‌று...) என்று நான் அடித்த‌ ர‌க‌ளைக‌ளுக்கும் இடையில் வெள்ளைச் சட்டை, நீலக் கால்சட்டையில் இருந்த என்னை சைக்கிளின் கேரிய‌ரில் திணித்து, என‌து பையை அப்பாவே த‌ன‌து தோளில் தொங்க‌விட்டப‌டி ப‌ள்ளிக்கு அழைத்துச் சென்ற‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளும் நினைவுக்கு வ‌ந்த‌து...ஊரில் அப்பா பெரிய மனிதர் என்பதால் ப‌ள்ளியில் என‌க்கு பெஞ்சில் இடம் கிடைக்கும் முன்பே என் அப்பாவுக்கு நாற்காலி கிடைத்த‌து.. பையில் எடுத்து வ‌ந்திருந்த‌ ஆர‌ஞ்சு சுளை மிட்டாய்க‌ளை என் சார்பாக‌ டீச்ச்ரே வ‌ழ‌ங்கினார்... என‌க்கு கொடுத்த மிட்டாயில் அதுவ‌ரை நான் அடித்த‌ கொட்ட‌ங்களும் அழுகையும் முன‌க‌ல்க‌ளோடு மெல்ல‌க் க‌ரைய‌த்தொட‌ங்கிய‌து...

மீண்டும் நிக‌ழ்கால‌த்துக்கு வ‌ந்தேன்..ஆனால் கேள்விக‌ள் ம‌ட்டும் என்னை துர‌த்திக் கொண்டே இருக்கின்ற‌ன‌.. இவ‌ளைப் போல‌வே இன்னொரு இட‌த்தில் நான் கேட்ட‌ செய்தி இன்னும் என‌க்கு பேர‌திர்ச்சியாக‌வே இருக்கிற‌து.. "எங்க‌ பையன் இப்பொவே எவ்ளோ ந‌ல்லா க‌ராத்தே ச‌ண்டை போட‌றான் தெரியுமா??" என்ற ஒரு த‌க‌ப்ப‌னைப் பார்த்து விக்கித்துப் போனேன்.. ரெண்டு வ‌யதுப் பிள்ளை படிக்கக் கற்றுக்கொள்வதில் கூட‌ ஒரு பெற்றோருக்கு பெருமை இருக்க‌லாம்... ரெண்டு வ‌ய‌துப் பிள்ளை அடிக்க‌க் க‌ற்றுக்கொள்வ‌து என்ன‌ பெருமை என்று இன்ன‌மும் என‌க்கு விள‌ங்க‌வே இல்லை... த‌லையில் அடித்துக் கொண்டு அங்கிருந்து வ‌ந்தேன்..

ஒரு பெரிய ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌த்தில் இன்று பொறுப்பான‌ ப‌த‌வியில் இருக்கும் நாங்க‌ள் எல்லாம் பள்ளிப் பருவத்தில் இதையா க‌ற்றுக்கொண்டு வ‌ந்தோம்... ப‌ள்ளியின் அள‌வு பெரிய‌தாக‌ இருப்ப‌தால் மட்டும் இர‌ண்டும் இர‌ண்டும் சேர்ந்தால் இருப‌த்திர‌ண்டா வ‌ர‌ப்போகிற‌து... இதே நிலை நீடித்தால் இன்னும் ஐந்து ஆண்டுக‌ள் க‌ழித்து முத‌லிர‌வு அறைக்குச் செல்லு முன்னே ப‌ள்ளியில் சேர்க்கும் விண்ண‌ப்ப‌டிவ‌த்தோடு தான் செல்ல‌ வேண்டும் போலிருக்கிற‌து..."எப்ப‌டியும் ஒரு வ‌ருஷத்துல எதாவ‌து ஒண்ணு பொற‌ந்துரும் சார்..இப்போவே சீட்ட‌ குடுத்துட்டீங்க‌ன்னா..பின்னாடி அலைய‌ வேண்டி இருக்காது பாருங்க‌.." என்று கேட்கிற‌ நிலையும் வர‌லாம்...
ஆர‌ஞ்சு மிட்டாய் க‌ரைந்து போய்விட்டது... நினைவுக‌ளுக்கும் ம‌னசாட்சியின் கேள்விகளுக்கும் ம‌ட்டும் ச‌க்தியில்லை.. க‌ரைந்து போவ‌த‌ற்கு...

4 comments:

Unknown said...

படித்தேன் நன்று
உங்களது கட்டுரையில் இன்னமும் கருத்தாழம் தேவையோ என தோன்ற வைக்கிறது

Ramya said...

comments la tamizh la epdi type panradhu nu therila.. anyways romba nalla irundhudhu...enaku nalla tamizhum kochai tamizhum sendhu vardhu unga post padichutu.. unga chinna vayasu ninaivugal oru cheran padam paathadhu pol irundhudhu.. adhe neram, unga friend kozhandaku karate kathu kodukardhula enna thappu.. adhu oru Kalai dhaane?? adhu real life la influence aagama petrorgal dhan paathukanum.. Indha kaalathuku etha madri ellam marudhu.. adhuku namma enna panna mudiyum.. changes laam welcome panni than aaganum.. appo dhan life nimathiya irukum..

KARL MARX. J said...

Boss!!!!! Kalakureenga....Actually I have read it long back...But I read it again and enjoyed each and every line..

Ganapathy said...

It was very good. I took lot of pains to read Tamil in the latest script which is different from the one I am used to.