Tuesday, October 30, 2007

மைக் டெஸ்டிங்..ஒன்..டூ...த்ரி...

சில தினங்களுக்கு முன் வெளிநாட்டிலிருந்து என் தம்பி அனுப்பி இருந்த ஐ‍‍‍‍‍ பாடில் பாடல்களை நிரப்புவதற்காக பாடல்களைத் தேடிக் கொண்டிருந்த போது "இந்த பாட்ட எல்லாம் கேட்டுப் பாருங்க தம்பி" என்று எனது நண்பர் ஒருவர் சில குறுவட்டுக்களைத் தந்தார்... நன்றி சொல்லிப் பெற்றுக்கொண்டு வீடு திரும்பிய பிறகு அந்தப் பாடல்களைக் கேட்காலானேன்... அத்தனையும் என் பாலபருவத்தில் நான் கேட்டு வள‌ர்ந்த பாடல்கள்.. கையில் ஐபாட் இருந்தும் மனசு மட்டும் ஏனோ அதில் லயிக்கவேயில்லை. எனது கால்சட்டைப் பருவத்தில் பாடல்களைக் கேட்க காரணமாயிருந்த, சினிமாவின் மீது ஒரு மிகப்பெரிய கவர்ச்சியை எனக்குள் ஏற்படுத்திய‌ முக்கிய நிகழ்வுகளையும் அதன் முதுகெலும்பாய் இருந்த எங்களூர் மைக் செட்டும் என் நினைவில் படலம் படலமாய்ப் படர்ந்தன...

ஊரின் எல்லைகளிலே இருந்த மாரியம்மன் மற்றும் அய்யனார் கோயில்களில் திருவிழாக் காலங்களில் பிரதானமான இடத்தைப் பிடித்துக் கொண்ட ஒன்று எங்களூர் மைக் செட்.... டால்பி, ஹைஃபய், ஸ்டீரியோஃபோனிக் என்று என்னென்னவோ தொழில்நுட்பங்கள் இருந்தாலும் அவைகள் எவையும் எங்களை எதுவும் செய்யாது என்ற தீர்மானமிகு கிராமம் எங்கள் ஊர்.... கூம்புக்கு கொண்டை போட்டது போன்ற ஒரு ஒலிபெருக்கியும், சில கேசட்டுக்களும், ஆதிகாலத்தில் புதுமையின் வடிவமாக கருதப்பட்ட ஒரு டேப் ரெக்கார்டரும் தான் அதன் தொழில்நுட்பம்... குறிப்பாக இரண்டு தருண‌ங்கள்... மார்கழி மாத அதிகாலையில் நாலரை மணிக்கெல்லாம் கணீரென்று ஒலிக்கும் கே.பி.சுந்தரம்பாளின் குரலோடு தொடங்கும்.. பிறகு "நீயல்லால் தெய்வமில்லை" என்று சீர்காழியின் குரலில் மாறி இசை மழை பொழியும், சற்று நேரத்தில் கே.வீரமணி ஒவ்வொரு ஊர் பேராகச் சொல்லி மாரியம்மனை கதறிக் கதறி அழைத்துக் கொண்டிருப்பார்.. அடுத்ததாக லுலுலுலுலுலுலுலு... என்று பயங்கரமான‌ குலவைச் சத்தத்தோடு "செல்லாத்தா... செல்ல மாரியாத்தா..." என்று தனது தனித்துவம் மிகுந்த பாணியில் செல்லாத்தாவோடும் மாரியாத்தாளோடும் உடுக்கையடித்து துள்ளிசை பாடிக் கொண்டிருப்பார் எல்.ஆர்.ஈஸ்வரி.. இறுதியாக.."புல்லாங்குழல் கொடுத்த மூங்கிலை" கண்ணதாசன் வரிகளிலும், "ஓராறு முகமும் ஈராறு கரமும்" என்று வாலியின் வரிகளிலும் டி.எம்.எஸ் பாட, வாய்ப்பாட்டில் தொடங்கியது வாலியின் பாட்டோடு முடிவுக்கு வரும்...மணியும் எட்டாகி இருக்கும்... மீண்டும் மாலை ஐந்து மணி முதல் இரவு பத்து வரைக்கும் இந்த பக்தி மணம் ஊரெல்லாம் கமழும்...

மார்கழி மாதம் என்பது அரையாண்டுத் தேர்வு நேரமாதலால் காலையில் அலாரம் வைத்தார் போல இந்தப் பாடல்கள் அமைந்தன... இந்த நேரத்தில் தான் எங்கள் ஊருக்கு ஒரு புதிய பக்தி மார்க்கமும் அதன் விளைவாக மைக்செட்டுக்காரருக்கு யோகமும் அடித்தது...

சபரிமலைக்கு விரதம் இருந்து செல்லும் பழக்கம் அப்போது தான் அறிமுகமாயிற்று... நன்றாக நான் உறங்குகிற‌ அதிகாலைப் போதுகளில்.. "ஸ்வாமியே..........ஹே.... ஹே...ய்ய்ய்ய்ய்ய்" என்று முதன் முறையாக ஒரு ஒலி திடீரென்று எழுந்ததும் விழுந்தடித்து எழுந்து உட்கார்ந்தது இன்றும் மறக்கவே முடியாது... அந்த குரலுக்கு சொந்தக்காரர் யார் என்று தேடி நான் அலையும் அளவிற்கு அதனால் பாதிக்கப்பட்டிருந்தேன்... மனதுக்குள் தன்னை சிக்கல் சண்முகசுந்தரமாய் நினைத்துக் கொண்டு நாபிக்கமலத்தில் இருந்து எழுந்த ஒலியை ஸ்வரப் பிரயோகங்களோடு அவர் வெளிக்காட்ட முயற்சி செய்வார்... ஒலிபெருக்கியொடு கர்ண கவச குண்டலம் போன்றது ஒலிவாங்கி.. அதையும் தான் நாங்கள் என்ன பாடு படுத்தினோம்... தனியாக அய்யப்பனைக் கூப்பிட்டுக் கொண்டிருந்த "சாமி" அடுத்தமுறை தன் மகனையும் தயார் பண்ணிவிட்டார்... பக்தி வெறியில் "ஓம் சுவாமியே" என்பதை அவன் "ஓஞ்சாமியே...ஓஞ்சாமியே...ஓஞ்சாமியே.." என்று கத்தத் தொடங்க.."டேய் அது ஓஞ்சாமியேவுமில்ல..ஏஞ்சாமியேவுமில்லடா.." என்று அவனுக்கு பின்னாளில் "சாமி"யே சொற்பொருள் விளக்கமளித்துக் கொண்டிருந்தார்...

இதேபோல மற்றுமோர் நகைச்சுவை, சித்திரை மாதம் மாரியம்மன் கோயிலில் காப்புக் கட்டும் போது நிகழும்.. "அன்பார்ந்த பக்தகோடிகளே!!!" என்று தொடங்கி..."அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் திருவிளாவை முன்னிட்டு.. விளாவில்..விளாவில்... என்று திக்கி, திணறி விழாவின் விலா எலும்பை போதுமான அளவுக்கு முறித்த பின் விஷயத்துக்கு வருவார்.."இன்று இரவு பத்து மணியளவில் கேப்டன் பிரபாகரன் சிறப்புத் திரைப்படம் திரையிடப்படும்..பக்தகோடிகள் அனைவரும் திரைப்படத்தை தரிசித்து அம்மன் அருள் பெற வேண்டுகிறோம்" என்று பக்தியை தனக்குத் தெரிந்த அளவுக்கு பாடாய்ப்படுத்துவார் அறிவிப்பாளர்... பின்னாட்களில் தொலைக்காட்சியில் பொங்கலுக்கும், தீபாவளிக்கும் சிறப்பு திரைப்படம் ஒளிபரப்பாகும் என்கிற விளம்பரத்தைப் பார்க்கும் போதெல்லாம் இந்தச் சம்பவங்கள் தான் என் நினைவுக்கு வரும்.

கோயில்களுக்கு அடுத்ததாய் மைக்செட்டுக்காரரின் ஜீவனோபாயத்திற்கு வழிகோலியவை திருமணம் நடைபெறும் வீடுகள்... "ஓளிமயமான எதிர்காலம்" என்று ஆரம்பிக்கும் செட்டுக்கட்டாத திருமண வீடுகளையே எங்களூரில் பார்க்க முடியாது...போதுமான அளவிற்கு எம்.ஜி.ஆரும், சிவாஜியும், எஸ்.எஸ்.ஆரும் மணமக்களை வாழ்த்திய பிறகு சின்னத்தம்பியும், சின்னக்கவுண்டரும், எஜமானும்,இன்ன பிற எட்டுப்பட்டி ராசாக்களும் வந்து வாழ்த்துவார்கள்..

அரசியல் திருமணங்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.. உள்ளூர் அரசியல் பிரமுகர்களின் "வாழ்த்துரையோடு" கல்யாணம் களைகட்டும்.. "நேத்து.... நைட்டு... நான் தலைவர் அவர்களோடு பேசிக் கொண்டிருந்த போது..." என்று வராத தலைவரின் இயலாமைக்கு சரித்திர விளக்கங்களை மேற்கோள் காட்டி முழங்கிக்கொண்டிருப்பார்.

திருமணங்களிலேயே இந்தப் பாடென்றால்...தேர்தல் நேரத்தில் என்னென்ன நிகழும் என்று நீங்கள் யோசிப்பது சரிதான்... அதுவரையிலும் சுவரொட்டி ஒட்டிக்கொண்டிருந்தவர் திடீரென அரசியல் பேச்சாளர் ஆகிவிடுவார்..."பேரன்பார்ந்த பெரியோர்களே, தாய்மார்களே, குழந்தைகளே (அவர்கள் என்ன செய்யப்போகிறார்களோ?)... என்று தொடங்கி..."உங்கள் பொன்னான, கண்ணான, முத்தான‌, மணியான,அன்பான, அழகான, மேலான வாக்குகளையெல்லாம்...." என்று வளர்ந்து அரைமணி நேரத்திற்கு அடுக்குமொழியில் சொற்போர் நிகழ்த்துவார்...

இதில் மைக் செட்டுக்காரருக்கு தான் யோகம்... "அச்சம் என்பது மடமையடா..." என்று ஆரம்பித்து அன்று முழுவதும் கொள்கை முழக்கம் கேட்கும்... பெரும்பாலான கொள்கை விளக்கப்பாடல்களை நான் கேட்டுவளரக் காரணமாய் இருந்தது இது தான்...கண்ணதாசனும், பட்டுக்கோட்டையாரும், வாலியும் எழுதிய கருத்தாழமிக்க பாடல்களும், பாடல்வரிகளும் எனக்கு சினிமாவின் மீது தீராத காதலை உண்டு பண்ணின...

முதல் இரண்டும் எங்களூர் மைக்செட்டின் சங்க காலம், மற்றும் இடைக்காலம் என்றால் நவீன காலத்தை தொடங்கி வைத்த புண்ணியத்தை நாங்கள் கட்டிக்கொண்டோம்.. அது வரையில் தென்னை மட்டையில் இருந்து கிரிக்கெட் மட்டைக்கு மாறியிருந்த விளையாட்டை "கௌரவிப்பதாய்" நினைத்துக்கொண்டு அடுத்த கூத்தை அரங்கேற்றினோம்.

அய்யனார் கோயிலுக்கு எதிரில் இருக்கும் பெரிய ஆற்றங்கரைத்திடல் தான் எங்களது விளையாட்டு மைதானம். ஊரெல்லாம் தொலைக்காட்சியும், அதன் வாயிலாக கிரிக்கெட் விளையாட்டும் பெருகியதால் நாங்களும் ஒலிபெருக்கியில் எங்கள் "போட்டிகளை நேர்முக வர்ணனை" செய்ய ஆரம்பித்தோம்.. உபயம் மைக்செட்டுக்காரர்....

அதுவரை மரியாதையே இல்லாத எனது பள்ளி தேர்ச்சி அறிக்கைக்கு புதிய மரியாதை கிடைத்தது.. "நம்ம செட்டுலயே நல்ல ரேங்க் வாங்குர ஆள் நீ தான்.. அதனால நீ தான் "கமாண்டர்" (அதாவது காமெண்டேட்டர் என்பதாக அர்த்தம் செய்து கொள்ள வேண்டும்..வேறொன்றும் இல்லை ஆங்கிலப் பித்து) எனத் தீர்மானமாக சொல்லிவிட்டனர்....

மைக்செட்டை தொட்டதுமே மனசுக்குள் ரவிசாஸ்திரி ஆகிவிட்டதாய் ஒரு மிதப்பு வந்துவிட்டது எனக்கு... எனக்குக் தெரிந்த வார்த்தைகளை எல்லாம் போட்டு பேசியதோடு புதிய புதிய வார்த்தைகளை ஆராய்ச்சி செய்ய வேறு தொடங்கினேன்... புள்ளி, குள்ளக்கால், அகலப் பந்து என்று என் தமிழ் ஆராய்ச்சியில் அனைவரும் கொஞ்சம் கலங்கிப் போனது என்னவோ உண்மை தான்...

இந்த "கமாண்டர்" வியாதி அடுத்த கட்டத்தை எட்டத் தொடங்கியது... "கமாண்டர்" அவர்கள் எங்கிருந்தாலும் உடனடியாக அலுவலகம் வருமாறு (எங்கே மைக்செட் இருக்கிறதோ அது தான் அலுவலகம்) "அளை"க்கப் படுகிறார்" என்று அறிவித்து அறிவித்து.. என்னை ஒரு ராணுவ தளபதியைப் போல ஆக்கிவிட்டனர்... போதை யாரைத்தான் விட்டது...

இந்த வேடிக்கைகளுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல ஒரு நிகழ்ச்சி போட்டியின் இறுதி நாளில் நடந்தது... வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்குவதற்காக உள்ளூர் அரசியல் பிரமுகர் ஒருவரை அழைத்து வந்திருந்தனர்... ஏற்கனவே "கமாண்டர்" போதையில் இருந்த நான், வந்திருந்தவரின் போதையை கவனிக்கவில்லை.... வெற்றிபெற்ற அணியை அறிவிக்கவேண்டியதை விடுத்து.. "இந்த போட்டியைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?" என்று அவரிடம் கேட்டுவைக்க...

பிரமாதமான "சுதியில்" மைக்கைப் பிடித்து.."நம்ம..... ஐய்யாவூட்டு கொளந்தை.... ஒரு நல்ல கேச்சர்... இன்று அவர்கள் நல்ல பல கேச்சுகளை போட்டார்கள்..." என்று என்னைப் புகழ்வதாய் நினைத்துக் கொண்டு அவர் ஏதேதோ பேசப்போக பார்த்துக் கொண்டிருந்த‌ கூட்டம் கொல்லென்று சிரிக்கத் தொடங்க... அவரிடம் இருந்து மைக்கைத் திரும்ப பெறுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது...இப்படியாக மைக்செட் ஊருக்குள் நிகழ்த்திய கூத்துக்கள் ஏராளம்...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த மாதம் ஊருக்கு சென்றிருந்தபோது மைக்செட்டுக்காரரைப் பர்த்தேன்... மைதானத்தின் ஒரு மூலையில் அமர்ந்திருந்தார்... எப்படி இருக்கீங்க என்று விசாரித்தேன்.. "எங்க தம்பி..முன்ன மாதிரி இப்பொ அவ்வளோ வருமானம் இல்ல... எல்லாரும் பொட்டி வாங்கி வச்சு அலரவுட்டுகிட்டு இருக்காங்க... நம்மள எல்லாம் யாரும் கூப்புடுற‌து இல்ல... இந்த பசங்க மேச்சுனு சொல்லி எப்பனாச்சு கூப்புடுவாங்க..அவ்வ்ளோதான்.." என்றார் விரக்தியாக...

மைதானத்தின் இன்னொரு மூலையில் இருந்து மைக்செட் அலறிக்கொண்டிருந்தது..."ஆடுகளத்தை...ஓடுகளமாக்கிக் கொண்டிருக்கிறார்..." என்று வர்ணனை கேட்டுக்கொண்டிருந்தது... "அடுத்த கமாண்டர் தயார் ஆகிறார் போலும்" என்று எண்ணியவனாக மௌனமாக அந்த இடத்தை விட்டு வந்தேன்...

No comments: