Thursday, November 1, 2007

கும்பிடப் போன தெய்வம்

ஒரு ஞாயிற்றுக் கிழமை மதியம்.... சலூன் கடையில் முடிதிருத்துபவரின் கட்டுப்பாட்டில் தலையை கொடுத்துவிட்டு வேறு வழியே இல்லாமல் எதிரே இருந்த வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டிக்கு பார்வயை செலுத்தினேன்... "கும்பிடப் போன தெய்வம்..." சாயாசிங்கின் வடிவில் படு குத்தாட்டத்தைப் போட்டுக் கொண்டிருந்தது... கதாநாயகன் அதிர்ஷ்டசாலி என்பதாலோ என்னவோ சாமி சாயாசிங்கின் மேல் வந்து ஆடிக்கொண்டிருந்தது... நிஜ வாழ்வில் இந்த சாமிகள் இந்த அளவிற்கு ராக, தாள, பாவங்களோடு ஆடாவிட்டாலும் என்னென்ன ஆட்டங்கள் ஆடியிருக்கின்றன என்று சிந்திக்கத் தொடங்கினேன்....

பொதுவாக அருள்வந்து ஆடும் சாமிகள் எல்லாமே என்னென்ன காரணங்களுக்காய் ஆடுகின்றன என்று யோசித்தாலே போதும் சாமிகளின் கல்வி, அறிவு, இன்ன பிற தகுதிகள் எல்லாமே பளிச்சென்று தெரிந்துவிடும்... எந்த சாமியும் இதுவரையில் மனிதர்கள் பிரச்சனைக்காக ஆடியதாக வரலாறு மட்டுமல்ல.. அறிவியல்,கணக்கு, ஆங்கிலம் என்று எதுவுமேயில்லை... சைவச் சாமியாக இருந்தால் "சக்கரப் பொங்கல்ல ஏன்டா இனிப்பு கம்மியா இருக்கு" என்றோ அசைவச் சாமியாக இருந்தால் "எனக்கு ரத்தம் வேணும்டா...ஆட்டுரத்தம்...." என்ற அளவிலேயே அவர்கள் ஆட்டங்கள் முடிந்து விடுகின்றன..."காவிரியில தண்ணிய தொறந்து விடுங்கடா!!!!!!" என்றோ அல்லது "ஏன்டா சினிமாவுல கதாநாயகிக்கு மட்டும் துணிப்பஞ்சம்???" என்றோ கேள்விகளை கேட்பதில்லை... பாவம்.... சாமிகளாய் இருந்திருந்தால் நிச்சயம் அப்படிக் கேட்டிருக்கும்... எங்களூரில் இது போன்ற வேடிக்கைகளை நிறைய கண்டு பரிச்சயப்பட்டு போயிருப்பதால் உங்களுக்கு சொல்வதில் எனக்கு எந்தச் சிரமமும் இல்லை...
சுனாமியைப் போல திடீர் என்று தோன்றுகிற சாமிகளின் இடமாக இருந்தது இரண்டே இரண்டு தான்... இதில் முதன்மையானது சாமிக‌ளின் ச‌ரித்திர‌ப் புக‌ழ் பெற்ற‌ "அர‌ச‌ம‌ர‌த்த‌டி"..
ஊரின் எல்லையை ஒட்டி இருந்த அந்த‌ அர‌ச‌ம‌ர‌த்தில் ஒரு காவ‌ல் தெய்வ‌ம் குடி இருப்ப‌தான‌ ந‌ம்பிக்கை உண்டு எங்கள் ஊரில்... அவ்வ‌ப்போது அந்த‌ ம‌ர‌த்த‌டியில் பூசைபோட்டு ப‌டைய‌ல் இடுவார்க‌ள்... என‌து கால்ச‌ட்டைப்ப‌ருவ‌த்தில் அந்த‌ பூசைகளுக்கு த‌வ‌ராம‌ல் நான் சென்று விடுவேன்... இத‌ற்கு முக்கிய‌ காரண‌ங்க‌ள் பூசையின் முடிவில் கொடுக்க‌ப்ப‌டுகிற‌ பிரசாதமும்... பூசை‌யை முடிப்ப‌த‌ற்காக‌ அருள் வந்து ஆடும் சாமிக‌ளின் வேடிக்கைகளும் தாம்.....
சாமிகளும் கிரிக்கெட் ஆட்டக்காரர்களைப் போலத்தான்..ஒருவரின் பாணியை இன்னொருவர் பின்பற்றுவதேயில்லை... அதுவரையிலும் சாந்த சொரூபியாக இருப்பவர் பூசை முடிவதற்கு குறிப்பிட்ட வினாடிகளூக்கு முன் "ஓஹாய்ய்ய்ய்ய்..." என்று கத்தியபடி உடலை முறுக்கியபடி, கண்களை சிவப்பாக்கி கால்களைப் பின்னியபடி உதைத்துக் கொள்ள ஆரம்பிப்பார்... இதான் சமயமென்று அவரது ஆதரவாளர்கள் (இவர்கள் இல்லை என்றால் சாமியாடுபவர்கள் பாடு திண்டாட்டம் தான்)"ஆஹா..தெய்வம் பிரசன்னமாயிடிச்சப்பா......" என்றபடியே சாமியிடம் ஓடுவார்கள்... "எதுக்காக வந்திருக்க..இப்பொ என்ன வேணும் உனக்கு..சொல்லுப்பா..சொல்லு..." என்று வாஞ்சையோடு விசாரணை நடத்திக் கொண்டிருபார்.. ஒருபுறம் வேடிக்கை பார்க்கவந்த மக்கள் கூட்டம் கன்னங்களில் "கடம்" வாசித்துக் கொண்டிருக்கும்...

முதலிரவு அறையில் மாட்டிய கணவனிடம் மகஜர் கொடுக்க காத்திருக்கும் மனைவியைப் போல சாமியும் தனது கோரிக்கைப் பட்டியலுடன் தயாராக காத்திருக்கும்.. இது தான் சமயம் என்று ஆரம்பிக்கும் சாமியின் முதல் குறி பெரும்பாலும் பூசாரியின் சம்பளமாகத் தான் இருக்கும்... "அவன் என்ன மதிக்கலடா... அவனுக்கு காசு தான் பெருசாப்போச்சு..." என்றவாறே "தனது" கருத்தை மெல்ல ஆரம்பிக்கும்... இறுதியில் பூசாரி கோவமாகி "சாமிக்கு சனியன் புடிச்சுப் போச்சு" என்றவாறே அந்த இடத்தைவிட்டு போய்விடுவார்... இது ஒருவகை சாமி...

தனது பிரதாபங்களைக் காட்ட நினைத்துக் குறிசொல்லி சிக்கலில் மாட்டிக்கொண்ட சாமியின் கதை இன்னும் சுவையானது... வழக்கமான அரசமரத்தடிப்பூசையில் அன்றைய சாமி வராததால் பூஜையை முடித்துவைக்க வேறு வழியில்லாமல் அவசரமாக ஒரு "சாமி" அவதரித்தது... பழக்கமின்மையின் காரணமாக என்ன செய்வது என்று தெரியாமலும், "பக்தகோடிகளின்" அன்பு மழையாலும் தேவை இல்லாமல் குறிசொல்லத் தொடங்கியது... ஒவ்வொருவராக சொல்லிக்கொண்டு வந்த சாமி, கூட்டத்தில் இருந்த‌ ஒரு பெண்ணைப் பார்த்து "உனக்கு கூடிய சீக்கிரம் கல்யாணம் நடக்கும்" என்று சொல்லிவைக்க... "இவரு பொய்சொல்றாரு...பொய் சொல்றாரு..." என்றபடி "ஓ" வென்று அவள் அழத்தொடங்கிவிட்டாள்.. அது தெரியாத குழந்தை அவள்... சாமியும் வேறு வழியில்லாமல் "பே" வென்று முழிக்கத்தொடங்கிவிட்டது...
இதற்கெல்லாம் உச்சக்கட்டமாக நடந்த ஒரு சம்பவம் இன்று நினைத்தாலும் வயிறு குலுங்க சிரிக்கவைக்கும்... சாமிக்கும்... அப்பாசாமிக்கும் நடந்த யுத்தம் அது...
ஒருநாள் பூசையில் சாமி திடீரென்று "டே......ய்ய்ய்ய்ய்ய்....நான் இனிமே இந்த மரத்துல இருக்கமாட்டேன்டா..அந்தமரத்துல தான் இருப்பேன்..." என்று ஒரு புதிய சர்ச்சையை கிளப்ப..கடுப்பாகிப்போன பூசாரி.. "நீ என்ன நெனச்சுகிட்டு இருக்க உம் மனசுல... நாளைக்கு நீ போஸ்ட்டு மரத்துல இருக்கேன்னு சொன்னா அதுக்கெல்லாம் பூசைவைக்க முடியுமா" என்று எகிறத் தொடங்க... சண்டையை சமாதானப் படுத்த நினைத்த சாமியின் அப்பா "அப்பாசாமியாக" பிரசன்னமாகியது... அது தான் சிக்கலே... ஏற்கனவே பூசாரியின் பேரில் இருந்த கடுப்பிலும், அப்பா(சாமி) தொல்லையாலும் வெகுண்டு எழுந்த சாமி, தந்தை என்றும் பாராமல் துரத்தத் தொடங்க.. அப்பாசாமி அலறி அடித்துக் கொண்டு மரத்தைச் சுற்றி ஓடத்தொடங்கியது... சாமியும் விடவில்லை.. வயதுமுதுமையால் ஓடமுடியாமல் கீழே விழுந்துவிட்ட அப்பாசாமியை மேலே ஏறி உட்கார்ந்துகொண்டு புரட்டியெடுக்கத்தொடங்கியது.. இதைக் கண்டு பதறியடித்துக்கொண்டு சுற்றியிருந்தவர்கள்.."அய்யயோ மேலே இருக்கறவரைத் தூக்குங்க..." என்று கத்த ஆரம்பிக்க‌ (இல்லையென்றால் கீழே இருந்தவரை ஒரேயடியாக தூக்க வேண்டியிருந்திருக்கும்) ஒரே களேபரத்தில் முடிந்தது பூசை.. அதில் இருந்து அரச மரத்து சாமி கொஞ்சம் எச்சரிக்கையோடு தான் "அவதரித்தது"...
இதேபோல இன்னொரு சம்பவம் கோயில் திருவிழாவில் நட்ந்தது... திருவிழாவில் சாமி ஊர்வலத்தில் ஏதோ தடங்கல் ஏற்பட்டுவிட...திடீர் உப்புமாவைப்போல "திடீர் சாமி" பிரசன்னமாகியது.."என்னத் திரும்ப என் எடத்துக்கே கொண்டுபோங்கடா.."என்று உத்தரவு போட்டது... காலகாலமாய் இதில் கரைகண்ட "அப்பாசாமி" பதிலுக்கு பிரசன்னமாகி "நான் ஊர்வலம் போகணும்டா..." என்று மிரட்டியது... சாமிகளுக்குள் நடந்த இந்த சர்ச்சைகளைக் கண்டு குழம்பித்தவித்த மக்கள் கடைசியில் "சீனியர்"சாமியின் முடிவுக்கு கட்டுப்பட்டார்கள்....

சாமிகளின் இதுபோன்ற அட்டகாசங்களால் கடுப்பாகிப்போயிருந்த பூசாரி..இதற்கு என்ன செய்யலாமென்று யோசித்து ஒரு வழி கண்டுபிடித்தார்..அது தான் "திரிப்பழம் கொடுப்பது".... பொதுவாக சாமிகளை மலையேற்ற விபூதியையோ அல்லது பச்சைக் கற்பூரத்தை கொளுத்தியோ தான் சாமியின் வாயில் போடுவார்கள்...இதிலெல்லாம் பழக்கப்பட்டுப் போயிருந்ததால் சாமிகளின் அடாவடி கொஞ்சம் அதிகமாகவே இருந்தது... திரிப்பழம் என்பது எண்ணெய் ஊற்றி நன்றாக எரிந்துகொண்டிருக்கும் விளக்குத்திரி... நீண்டநேரமாய் எரிவதால் எளிதில் வாயில் அடக்கிவைத்துக் கொள்ளமுடியாது... இதில் முதல்பலி கோயில் தீமிதி நாளில் நடந்தது...

தீமிதி நாளில் ஒன்று இரண்டல்ல.. ஏராளமான சாமிகள் அவதரித்து ஆடும்.. அதில் ஒரு சாமி பூசாரியிடம் ஏடாகூடமாகப் ஏதோ பேசப்போக..."திரிப்பழம் கொடுத்துடுவேன்" என்று பூசாரி மிரட்ட.."திரிப்பழம்" என்றால் ஏதோ ஞானப்பழம் என்று நினைத்த சாமி... குடுடா..குடுடா.. என்று ஏகத்துக்கும் எகிற.. சாமிக்கு திரிப்பழம் கொடுக்கும் முதல் வைபவம் இனிதே அரங்கேறியது... அலறி அடித்து சாமி போட்ட கூப்பாட்டில் மற்ற சாமிகள் போன இடம் தெரியவில்லை... அதிலிருந்து ஊருக்குள் சாமிகளின் ஆட்டம் ஒட்டுமொத்தமாய்க் குறைந்தது....
இதையெல்லாம் பார்க்கும் போது என் மனதில் அந்த வயதில் தோன்றியது என்னவென்றால்..இவ்வளவு கூத்துக்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறதே..இந்த தெய்வம் நின்று தான் கொல்லுமா??" என்று நினைத்துக் கொள்வேன்... ஆனால் க‌ட‌ந்த‌ இர‌ண்டு வார‌ங்க‌ளுக்கு முன் எங்க‌ளூர் கோயிலில் காவ‌லாளியை க‌ட்டிவைத்துக் கொலைசெய்துவிட்டு சாமியின் ந‌கைக‌ள் அனைத்தையும் கொள்ளை அடித்துச்சென்ற‌ செய்தியை கேள்விப்ப‌ட்ட‌தும் விக்கித்துப் போனேன்... இப்போது தோன்றுகிறது.."தெய்வ‌ம் நின்று கொல்லுகிற‌தோ இல்லையோ..கொலையைப் பார்த்துக் கொண்டே நின்றிருக்கிற‌து..."

2 comments:

vasant said...

காட்சிகளை நேரில் பார்ப்பதுபோல் இருக்கு ...

vasant said...

காட்சிகளை நேரில் பார்ப்பதுபோல் இருக்கு ...