Monday, November 12, 2007

டூரிங் டாக்கீஸ் கனவுகள்

"சினிமா என்கிற ஒன்று தமிழ் மக்களின் வாழ்வோடு பிரிக்கவேமுடியாத ஒன்றாக ஆகி விட்டது அல்லவா???".. அண்மையில் திரு.சுஜாதா அவர்கள் எழுதிய "கனவுத்தொழிற்சாலை" வாசித்துக் கொண்டிருந்தேன் (எத்தனையாவது தடவை என்று நினைவில் இல்லை). அப்போது என் மனதில் தோன்றிய சிந்தனை தான் இது... ஒவ்வொரு தமிழனும் அவனது சிறு வயது முதலே ஏதேனும் ஒரு வகையில் இந்த மாயக்கண்ணாடியால் ஈர்க்கப்பட்டோ அல்லது பாதிக்கப்பட்டோ தான் இருக்கின்றான்..தமிழனின் ரசனைக்கு நான் மட்டும் விதிவிலக்கா என்ன...


சினிமா ஆசையில் சின்ன வயதில் நண்பர்களோடு சேர்ந்து நான் அரங்கேற்றிய கூத்துக்களுக்கும், அடித்த கொட்டத்திற்கும் பஞ்சமே கிடையாது.... அத்தனைக்கும் சூத்திரதாரியான குரல் எது??????

"அன்புள்ளம் கொண்ட சினிமா கலாரசிகர் பெருமக்களே.. நமது தைலம்மை திரையரங்கில் வெற்றி முரசு கொட்டி வெண்திரையில் பவனி வருகிறது...." என்கின்ற சினிமா கொட்டகையின் அறிவிப்பு தான்....
இந்த அறிவிப்பு வந்த உடன் அடுத்த நிமிடம் நாங்கள் பெட்டிக்கடையில் தான் இருப்போம்.. புதிதாக வந்திருக்கும் திரைப்ப்டத்தின் பாட்டுப்புத்தகத்தை வாங்கத்தான் அங்கே அவசரமாக‌ கூடிய கூட்டம். பாட்டுப் புத்தகம் கையில் வந்து விட்டால் போதும்... தமிழகத்தின் அத்தனை பாடகர்களும் நாங்களே தான் என்று எண்ணிக் கொண்டு எங்கள் கச்சேரியை ஆரம்பித்துவிடுவோம்... இதில் பாதிக்கப்பட்டு வீடுமாற்றிக் கொண்டு போன அக்கம்பக்கத்துக்காரர்களின் சாபத்தைக் கணக்குப் போட்டால் ஏழேழு ஜென்மத்துக்கு விமோசனமே கிடைக்காது... அத்த‌னை இனிமையாக‌ பாடி இருக்கிறோம்...


எப்படியாவது அப்பாவை கெஞ்சிக் கூத்தாடி சினிமாவுக்கு அழைத்துச்செல்ல வைக்கின்ற சாமர்த்தியங்கள் அத்தனையும் யாரும் சொல்லித்தராமலேயே எனக்கு அப்போது இருந்தது. அப்பா ஊருக்குள் பெரிய மனிதர் என்பதால் நாற்காலி வரிசை தான் எங்களுக்கு (எங்கள் ஊர் சினிமா கொட்டகையின் வி.ஐ.பி வரிசை அது)....

சூப்பர் ஸ்டார் படங்கள் என்றால் நாங்கள் நிலைகொள்ளாத மகிழ்ச்சியில் தான் இருப்போம்... அவரின் ஒவ்வொரு ஸ்டைலும் எங்களைக் கட்டிப்போட்டது போல மயக்கி வைத்திருந்தது.... வாயில் சிகரெட்டை அவர் தூக்கிப் போட்டுப் பிடிக்கின்ற பாணியை இடைவேளைத் தட்டுமுறுக்கை வாயில் தூக்கிப்போட்டுப் பிடிப்பதிலேயே ஆரம்பித்துவிடுவோம்...


இந்த ரஜினி லாகிரி தலைக்கேறியதால் நாங்கள் வெள்ளை நிறத்தில் சாக்பீஸ், சிலேட்டுக்குச்சி, உடைந்த பேனா மூடி என்று எது கிடைத்தாலும் வாயில் விட்டெறிய ஆரம்பித்தோம்... எங்களின் இந்த கலைத்தாகத்தை தீர்ப்பதற்காகவே எங்கள் ஊரில் அப்பொழுது விற்பனைக்கு வந்தது 'சிகரெட் மிட்டாய்'.... சிகரெட் போன்ற காகிதத்தில் சுருட்டப் பட்ட மிட்டாய் அது... கையில் சிகரெட் மிட்டாயை வைத்துக் கொண்டு அம்மா எதிரில் ஸ்டைலாக ஊதிக்காட்ட தயிர் கடைகிற மத்து ரெண்டாக முறிந்தது அன்று...


அதோடு விடவில்லை நான்.. பைக்கில் இருந்து முன்பக்கமாக காலைத் தூக்கிப்போட்டு அவர் இறங்கும் ஸ்டைலை பரிசோதனை முயற்சியாய் எனது சைக்கிளில் செய்துபார்க்க, பிரேக்கு கம்பிகளில் மாட்டி டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று கிழிந்தது கால்சட்டை.. நல்ல வேளை கால்சட்டையோடு போயிற்று...இத‌ற்குப் பிற‌கு கொஞ்ச‌ நாட்க‌ள் அமைதியாக‌ க‌ழிந்த‌ன‌..


எங்க‌ள் அமைதியை குலைக்க‌ ராம‌ராஜ‌ன் ந‌டித்த‌ ப‌ட‌ம் ஒன்று வெளியான‌து எங்க‌ள் ஊர் டூரிங் டாக்கீஸில்... கையில் கொட்டாங்க‌ச்சி வ‌ய‌லின் வைத்துக் கொண்டு அவ‌ர் ந‌டித்த‌ அந்த‌ ப‌ட‌த்தின் பாதிப்பு மீண்டும் ஒரு கிறுக்குத் த‌ன‌த்திற்கு பாதை வ‌குத்த‌து....

"டேய் எப்புடியாச்சும் அந்த‌ வ‌ய‌லின‌ வாங்கிற‌னும்டா.." என்று ந‌ண்ப‌ர்க‌ள் குழாம் உசுப்பேற்றிவிட, ப‌க்க‌த்து ஊர் திருவிழாவில் அதை நிரைவேற்றுவ‌து என்று தீர்மானித்துக் கொண்டேன்...

ஏற்க‌ன‌வே என‌க்கு விசில் வாங்கிக் கொடுத்து பாதி ப‌ஸ் ப‌யண‌த்தில் நான் ஊதி சிக்க‌லில் மாட்டிவிட்டிருந்த‌தால் என‌க்கு அது போன்ற‌ எதையும் வாங்கியே கொடுக்க‌க் கூடாது என்ற‌ தீர்மான‌த்தில் இருந்தார் என் அப்பா.... இருந்தாலும் என‌து சினிமா போதை தலைக்கேறி இருந்ததால் அதை நிரைவேற்றுவ‌தில் க‌ரும‌மே க‌ண்ணாயிருந்தேன்....


நீண்ட‌ ர‌க‌ளைக்குப் பின் என‌து முயற்சியில் வெற்றியோடு வீடு திரும்பினேன்...கையில் வ‌ய‌லின் வ‌ந்த‌ உடன் வாசிப்பு என்ற பெயரில் க‌ர‌க‌ர‌க‌ர‌வென்று நான் த‌றிகெட்டு மேலும் கீழுமாய் இழுக்க‌த்தொட‌ங்க‌... ராக‌ம் வ‌ந்த‌தோ இல்லையோ ப‌க்க‌த்தில் இருந்த‌வ‌ர்க‌ள் காதுக‌ளில் ர‌த்த‌ம் வ‌ராத‌ குறைதான்... அன்று கிடைத்த‌ பூசையோடு வ‌ய‌லின் வாசிப்பு முடிவுக்கு வ‌ந்த‌து...

அப்பாவோடு சினிமாவுக்கு சென்றால் இருக்கும் சிற்சிறு இடைஞ்ச‌ல்க‌ளை ம‌ன‌தில் கொண்டு ந‌ண்ப‌ர்க‌ள் ப‌ட்டாள‌த்தோடு செல்ல‌ ஆர‌ம்பித்த‌ கால‌ம் அது... ஆண், பெண் வ‌ரிசைக்கு இடையே இருக்கும் த‌டுப்புச் சுவ‌ரின் மீது ஏறி ர‌யில்வ‌ண்டி ஓட்டிய‌து, த‌ரைடிக்கெட்டில் ப‌ட‌ம் பார்க்க‌ குவித்த‌ ம‌ண‌ல்முட்டுக்க‌ளில் காட்டுக் க‌ருவேல‌ங்காய்க‌ளை ஒளித்துவைத்து அதில் உட்கார்ந்த‌வ‌ர்க‌ளை அவ‌ஸ்தைக்குள்ளாக்கிய‌து, "ஓளி வ‌ரும் பாதையில் பிளேடைவைத்தால் திரை கிழிஞ்சு போயிரும்டா" என்று எவ‌னோ கிள‌ப்பிவிட‌ அதை உண்மை என்று ந‌ம்பி கையை விட்டு ஆப்ப‌ரேட்ட‌ரிட‌ம் த‌ர்ம‌ அடிவாங்கிய‌ ந‌ண்ப‌னின் க‌தை என்று எங்க‌ள் கோஷ்ட்டியின் அட்டூழிய‌ங்க‌ள் எல்லையில்லாம‌ல் போன‌ கால‌ம் அது...

இந்த செய்திகள் ஏதோ ஒரு புண்ணியவான் மூலமாக அப்பாவின் காதுகளுக்குப் போக அத்தோடு சினிமாக் கொட்டகைக்கு மொத்தமாக முழுக்குப் போட வேண்டிவந்தது... மனம் நொறுங்கிப் போன நிலையில் ஒரு நண்பனின் வாயில் இருந்து வந்த அந்த வாசகம் காதுகளில் தேன் பாய்ச்சியது... அந்த திருவாசகம் "பேசாம நாமளே படம் எடுத்துறுவோம்டா...."

படம் எடுப்பதற்கு முன் எங்களை இதற்கு தூண்டியது எது என்று நான் சொல்லியாக வேண்டும்... திரையரங்குகளில் இருந்து வெட்டி எறியப்படும் துண்டு ஃபிலிம்களை பெட்டிக்கடைக் கிழவி ஐந்து காசுக்கு ஒன்று என்று விற்றுவந்தது... அதை வாங்கி ஈர்க்கங்குச்சிகளில் செருகி நாங்கள் பார்த்து மகிழ்ந்தது உண்டு... இந்த துண்டுப் படங்களை வாங்க கிராக்கி அதிகமானதால் ஐந்து காசுக்கு ஒன்று என்று விற்ற கிழவி நாலணாவுக்கு மூன்று என்று விற்கத்தொடங்கியது... கிழவியின் இந்த விலைவாசி உயர்வைக் கண்டித்து நாங்கள் போட்ட சண்டை தான் எங்கள் பொதுவாழ்வின் முதல் விலைவாசி உயர்வுப் போராட்டம்..


இந்த சண்டையின் தொடர்ச்சியாய் ஆப்பரேட்டருக்கு பீடிக்கட்டு வாங்கிக் கொடுத்து துண்டு ஃபிலிம்களுக்கு நேரடி கொள்முதல் ஆரம்பித்துக் கொண்டோம்..

எங்களில் கொஞ்சம் அறிவாளியான ஒருவன் தான் இந்த படமெடுக்கும் யோசனையைச் சொன்னவன். படமெடுப்பதென்பது தயாரிப்பாளர், வினியோகஸ்தர் என்று பெரிய அளவில் எதுமில்லாமல்.. அப்பாவின் வேட்டியோடு முடிந்து விடுகிற சமாச்சாரம் தான்.

நண்பன் தனது தொழில்நுட்ப வேலையை ஆரம்பித்தான்... வீட்டின் முற்றத்தில் வெளிச்சம் விழுகிற இடத்தில் ஒரு பூதக்கண்ணாடியை (லென்ஸ்)சாய்த்து வைத்து அதன் வெளிச்சம் வீட்டினுள் விழுமாறு செய்தான்... எங்களில் இருவர் சுவற்றில் அப்பாவின் வேட்டியை இரண்டு புறமும் பிடித்துக் கொண்டோம்... வெளிச்சத்திற்கும் திரைக்கும் இடையில் துண்டுப்படச் சுருளை ஒட்ட... மெல்ல உருவம் அசைவது போன்ற தோற்றம் திரையில் ஏற்பட்டது... நாங்கள் எடுத்த முதலும் கடைசியுமான‌ படம் இது தான்...
காலத்தின் வேகத்திற்கு ஏற்ப ஓடவேண்டி இருந்ததாலும் பள்ளியில் மேல்வகுப்புக்களுக்கு சென்றுவிட்ட காரணமும் சேர்ந்து எங்கள் சினிமா கனவுகளைக் கரைத்துக் கொண்டோடிவிட்டது...

கால்சட்டையில் முடிந்து வைத்த கனவுகள் கரைந்து போயிருக்கலாம்... ஆனால் கால்சட்டைப் பருவந்தொட்டே இதயத்துக்குள் போட்ட எத்தனையோ கனவுகள் காலப் பெருவெள்ளத்திற்குப் பிறகும் இன்றும் ஞாபக முடிச்சுக்களை நெஞ்சில் அடையாளமாக விட்டுச் சென்று இருக்கின்றன...

என்னைப் போலவே என்னோடு அன்று விளையாடிய அத்தனை பேரின் மனசிலும் அவைகள் நிச்சயம் இருக்கும் தானே???????

No comments: