Friday, November 23, 2007

தரை மேல் பிறப்போம்.. தண்ணீரில் மிதப்போம்...

இவர்களை இந்நாட்டின் எந்த மூலையிலும், எந்த வேளையிலும் பார்க்கமுடியும்... நட்ட நடு ரோட்டில் நடனம் ஆடிக்கொண்டிருப்பார்கள்.. ஆனால் இவர்கள் ஒன்றும் சினிமா கதாநாயகர்கள் அல்லர்... சாலை ஓரத்தில், விளக்குக் கம்பத்தின் அடியில் தலை கீழாகவும் கால் மேலாகவும் சிரசாசனக் கோலத்தில் கிடப்பார்கள்..ஆனால் இவர்கள் ஆசனங்களைக் கரைத்துக் குடித்த யோகிகள் அல்லர்... யாருமே இல்லாத இடத்தில் கூட தோளைச் சுற்றியிருக்கும் துண்டை இரு கைகளிலும் இறுகப் பற்றியபடி " நான் சொல்றேன்.. நம்மூர்ல அடுத்த பிரசிரண்டு தேர்தல்ல நீ தான் எம்.பி" என்று அரசியல் முழக்கம் இடுவார்கள்... இத்தகைய செயற்கரிய செயல்களை எல்லாம் செய்யும் இவர்கள் யார்?????... அங்கிங்கெனாதபடி இந்நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் கூட நிரைந்துவிட்ட "குடி"மக்கள் தான் அவர்கள்....

சின்ன வயது தொட்டே இவர்களது அழிம்புகளும். அட்டூழியங்களும் என்னை வெகுவாகக் கவர்ந்துவிட்டிருந்ததால் அவற்றை எல்லாம் எடுத்துச் சொல்வதில் எந்தச் சிரமமும் இல்லை... ஊரின் எல்லையில் இருக்கும் பனங்கரை தான் இந்த புத்தர்களின் போதி மரம்... அந்த விடிந்தும் விடியாத காலைப் பொழுதுகளில் கூட கிராமத்தின் "பால் குடி" மறவாத மக்களை ஒட்டுமொத்தமாக அங்கே காண முடியும்...

"குடியும் கூத்தும் " என்ற வழக்கு ஒன்றும் அறியாதவர்கள் சொல்லிவைத்தது அல்ல.. குடி முதலில் குடலுக்குள் அரங்கேறும்.. பிறகு அவர்கள் நிகழ்த்துகிற கூத்துக்கள் ஊருக்குள் அரங்கேறும்... நான் தொடக்கத்தில் சொன்ன கூத்துக்கள் அத்தனையும் இந்த கூத்தபிரான்கள் நிகழ்த்தியவைகள் தாம்..

குயிலுக்கு கூட தொண்டை கட்டிக் கொள்ளுகிற அதிகாலையில் "பால்" உள்ளே போனதும் "பாட்டு" பிரமாதமாக வெளியேவ‌ரும்... "ஓடுகிற வண்டி ஓட..ஒத்துமையா ரெண்டு மாடு" என்று எக்கச்சக்கமான "சுதி"யில் பாட ஆரம்பித்து ஊருக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் சொச்சமிச்ச மக்களையும் எழுப்பி உட்கார வைக்கும் சேவல்கள் இவர்கள்...இதில் பெரிய கொடுமை என்னவென்றால் பாடலின் நடுவே "ஆண்டவனக் காதலிச்சா பாண்டி நாட்டு மீனாச்சி..." என்ற அடியை மட்டும் ஐம்பது முறையாவது பாடி..அந்த ஆண்டவனே வந்து அடுத்த அடிக்குப் போக உத்தரவு கொடுத்தால் தான் போவார்....

பல வருடங்களாக சாராயத்தைக் குடித்துக் குடித்துப் பழகிப் போன பெருசுகளில்.. புதிதாக ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் என்கிற வெறியில்..."பழைய சோற்றையும், பட்டைச் சாராயத்தையும் கலந்து, அதில் பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் இவற்றையும் அள்ளிப் போட்டு புதிய "காக்டெயிலை" கண்டுபிடித்துவிட்ட மகிழ்ச்சியில் க‌ல‌க்கி அடித்த "விஞ்ஞானிகளும் " இங்கே உண்டு...இட்லியையும், பீரையும் க‌ல‌ந்த‌ ஆறுச்சாமிக்கெல்லாம் அப்ப‌ன், தாத்தன்க‌ள் இவ‌ர்க‌ள்...

பொதுவாக பனங்கரையும், சாராயக் கடைகளும் "மூத்தகுடி" மக்களின் இடங்களாகக் கருதப்பட்டன... இளசுகள் பெரும்பாலும் புட்டிகளில் அடைக்கப் பட்ட மதுவகைகளைத் தான் விரும்பும்..

ப‌ன‌ங்க‌ரை பெருசுக‌ளின் போதிம‌ர‌ம் என்றால்..புளிய‌ந்தோப்பு இள‌சுக‌ளின் பாச‌றை...அதிலும் தீபாவ‌ளி, பொங்க‌ல் என்று எதாவ‌து விசேச‌ங்க‌ள் ஊருக்குள் வ‌ந்தால் போதும்.. இவ‌ர்க‌ளின் அல‌ப்ப‌றைகளும், அட்ட‌காச‌ங்க‌ளும் சொல்லில் அட‌ங்காது...

ஆயிரம் இளைஞர்களை என்னிடம் கொடுங்கள் அவர்களை இந்நாட்டின் மன்னர்கள் ஆக்கிக் காட்டுகிறேன் என்று சொன்னவர்களுக்கெல்லாம் ஒரு செய்தி.. அவர்கள் அத்தனை பேருக்கும் ஆளுக்கொரு பாட்டிலைக் கைகளில் கொடுங்கள்..எத்தனையோ இயக்குநர்கள் கதறியும் வராத உணர்ச்சிகளை எல்லாம் ஒட்டுமொத்தமாக உண்டியல் திறந்து கொட்டுவார்கள்.... அதுவரை ஊருக்குள் யாரைக் கண்டாலும் வேட்டியை தரைதடவுகிற அளவுக்கு இறக்கிவிடுகிற ஆள்..மப்பு மண்டைக்கு ஏறியதும்... இருந்த வேட்டியை மொத்தமாக அவிழ்த்து தலையில் முண்டாசாகக் கட்டிக் கொண்டு "கந்தன் கருணை" சிவாஜியைப் போல நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு "வெற்றிவேல்.. வீரவேல்.." என்று குறுக்கும் நெடுக்குமாய் டங்.. டங்..கென்று வீரநடை பழக ஆரம்பித்துவிடுவான்...

இதற்கு நேர்மாறாக கால்களைத் தரையில் வைக்காமலே சைக்கிளில் எட்டு, ஒன்பது என்று ஊரின் அத்த்னைச் சந்துகளிலும் படம் வரைந்தவன் ஒரு கோப்பை உள்ளே போனதும் அடித்துச் சாய்த்து கட்டுக் கட்டிய பிணம் போலக் கிடப்பான்... இவர்கள் எல்லாரும் மகிழ்ச்சிக்காகக் குடிப்பவர்கள்... சோகத்துக்காக குடிப்பவர்களின் கதைகளும், குடித்தபிறகு அவர்கள் படுத்துகிற பாடுகளும் இன்னும் வேடிக்கையானவை...

பெரும்பாலும் சோகத்துக்காக குடிப்பவர்கள் காதல் தோல்வியாளர்கள் தாம்...மாதுவின் மீதான காதலுக்கு கால் உடைந்தால் மதுவின் மீது காதல் தானாக வரும் என்ற சாதியைச் சேர்ந்தவர்கள் இவர்கள்.. ஒரு நாள் தீபாவளிப் "பூசையில்" மொக்கையன் நிகழ்த்திய கூத்துக்கள் இன்றளவும் ஊருக்குள் குடிகாரர்கள் மத்தியில் பிரபலமாகப் பேசப்படுகிற ஒன்று... பக்கத்து ஊர் பெண்ணுக்கு காதல் கடிதம் எழுதி அது தோல்வியில் முடிய..தீபாவளிப் பூசையில் முட்டமுட்டக் குடித்து அதைத் தீர்த்துக் கொள்வது என்கிற வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவோடு பூசைக்கு வந்தான் மொக்கையன்...

இரண்டு, மூன்று ரவுண்டுகள் வரை இருந்த நிதானம் சரக்கு எக்கச்சக்கமாகிப் போனதும் பிசகி... பக்கத்தில் உட்கார்ந்திருந்த தங்கராசு காதலியாய்த் தெரிய... ஆரம்பித்தது அட்டகாசம்.. "குட்டிம்மா..குட்டிம்மா... என்ன உனக்கு புடிக்கலையா?... வா குட்டிம்மா நம்ம ஓடிப்போயி கல்யாணம் கட்டிக்கலாம்..." என்று உளறியபடி பக்கத்தில் இருந்த தங்கராசுவின் தாடியைத் தடவி அவன் கன்னத்தில் பச்சக், பச்சக் என்று முத்தம் கொடுக்கத்தொடங்கிவிட்டான்...

ஏற்கனவே இவனுக்காக கடிதத்தை சுமந்து சென்று..பெண்ணின் அப்பனிடம் செம்மையாக உதை வாங்கி வந்த கடுப்பிலிருந்த தங்கராசு இவனது அட்டகாசத்தால் பொறுமையிழந்து "குட்டிம்மாவாவது...சட்டிம்மாவாவது..உதை வாங்கி வச்சது பத்தாதுன்னு வேகாளத்தையா கெளப்புற.."என்றபடி அவன்மேல் பாய்ந்து குதறத்தொடங்க ஒரே ரகளையில் முடிந்தது தீபாவளி... இதே போல் வேறு ஒரு கூத்து பொங்கலுக்கு காத்திருந்தது...

பொதுவாகவே "சபைக்கு" வருகிறவர்கள் பாட்டிலுக்கு பக்க உணவுகள் எதையாவது வாங்கி வருவார்கள்.. நீங்கள் எதிர்பார்ப்பதைப் போல "வறுத்த முந்திரி, 65,75" என்று எதுவும் கிடையாது... சாதாரண நாட்கள் என்றால் வேர்க்கடலை,ஊறுகாய், மிச்சர் பொட்டலம், மொந்தன் வாழைப்பழம்..இவற்றல் ஏதாவது இருக்கும்.. சிறப்புப் பூசைகள் என்றால் அன்று வறுத்த முட்டை, வடை, ஆம்லேட் என்று கொஞ்சம் தடபுடலாகவே இருக்கும்... குடிக்கிறவர்களை தவிர‌ இந்த பக்க உணவுகளைத் தின்பதற்காகவே வருகிற கூட்டமும் உண்டு... ஒவ்வொரு முறையும் சரியாக வந்து இந்த சமாச்சாரங்களை எல்லாம் தின்று முடித்துவிட்டு இரவு உணவுக்கான தேவை முடிந்ததும் கம்பியை நீட்டுகிற ஆள் "கோயிந்து"..."கோயிந்துவின் இந்த அடாவடியால் பொறுமை இழந்து தவித்த "குடிமக்கள்" பொங்கல் பூசையில் கோயிந்துவுக்கு பூசை வைக்க காத்திருந்தனர்.. பாவம்..பொறிக்குள் இருக்கிற வடையை நம்பி ஏமார்ந்து போன சுண்டெலியைப் போல ஆனது "கோயிந்து" கதை..

"பொங்கல் பூசையில் ராச்சாப்பாட்ட முடிச்சுக்கிரலாம்" என்ற எண்ணத்தோடு காத்திருந்த "கோயிந்துவுக்கு" முன்பே சொல்லிவைத்தது போல் கோலாவில் குவார்ட்டரைக் கலந்து கொடுக்க...லாகிரி தலைக்கேறிப்போய் ஆரம்பமானது அவன் நிகழ்த்திய கூத்து... சாதுவாய் அமர்ந்திருந்தவன் திடீரென்று சன்னதம் கொண்ட சாமியாய் "யே...........ய்ய்ய்ய்ய்ய்ய்ய்" என்று சப்தமிட்டபடி எழுந்து, தள்ளாடியபடியே நடந்து சென்று, ஒத்தையடிப்பாதையில் கிடந்த பெரிய கல்லைத்தூக்கி ஆகாயத்தில் எறிய..அது வேலியோரமாய் இயற்கை உபாதைக்காக ஒதுங்கி இருந்த‌ அவனது அப்பாவின் முதுகிலேயே போய் விழ... மூன்று நாட்களுக்கு அவருக்கு வரவேண்டிய உபாதை மட்டுமல்ல..மூச்சே சரியாக வராமல் போய்விட்டது... 'பொங்கலும் அதுவுமா எம் முதுவுல கல்ல உட்டெறிஞ்சவன் எங்கையில கெடச்சான்ணாக்கா..." என்று உறுமியபடியே கட்டிலில் கிடந்தார் அவர்...

இப்படி எத்தனையோ கூத்துக்கள் நிகழ்ந்து இருந்தாலும் குடி குடிப்பவனை மட்டும் தான் சந்தோஷப் படுத்துகிறது..அவனது குடும்பத்தார் அதனால் படும் வேதனைகள் சொல்லில் அடங்காதவை... இவை எல்லாம் விட குடியினால் குடை சாய்ந்த கோபுரங்களைப் பற்றி படித்தபோது என் நெஞ்சு கனத்துப் போனது...

ஒரு நாளைக்கு மூன்றே மூன்று வேளை தான் என்று முறைவைத்துக் குடித்த எனது நண்பன் வீட்டுப் பெருசு.. குடல் கொதகொதவென்று வெந்து போய் உணவைக் கூட உட்கொள்ளமுடியாமல் இறந்த சம்பவம் இன்றும் நினைத்தால் நெஞ்சை உலுக்கி எடுக்கிற ஒன்று...

குடி குடியைக் கெடுக்கும் என்று எழுதிவைப்பதில் எந்தப் புண்ணியமும் இல்லை... குடியை ஒழிக்கிறவரையில் குடிகாரர்களையும் ஒழிக்கமுடியும் என்பது சாத்தியமே இல்லாத ஒன்று தான்...

வானொலியில் 'தரை மேல் பிறக்கவைத்தான் எங்களைத் தண்ணீரில் மிதக்க வைத்தான்.." என்று மீனவர்களின் சோகத்தை கவிஞரின் பொன்னான வரிகள் பாடுகின்றன... ஆனால் தரையிலும், தண்ணீரிலும், ஆகாயத்திலும் போதையில் மிதப்பவர்களின் குடும்பம் கண்ணீரில் மிதந்து கொண்டிருக்கிறது... எந்தக் கவிஞன் பாட வரப்போகிறானோ...

1 comment:

Senthil Manickam said...

kudipatharku aayiram kaaranam sollalaam. atharku pala vitha varnanani kodukalaam...

[மாதுவின் மீதான காதலுக்கு கால் உடைந்தால் மதுவின் மீது காதல் தானாக வரும் என்ற சாதியைச் சேர்ந்தவர்கள் இவர்கள்]

endru neenga kudutha varnanai super..