Monday, January 7, 2008

வலைகள் வைத்திருக்கும் அலைகள்

"முரண்பாடு" என்றால் என்ன?
என்றாய்
என் கழுத்தைக் கட்டிக் கொண்டு...

"என்னை உப்பு மூட்டை தூக்கு"
என்று
ஒரு சர்க்கரை மூட்டை கேட்கிறதே
இது தான் என்றேன்...

*******************************

கையில் வைத்திருந்த குடையை
காற்றில் ஆட்டி விளையாடிக்கொண்டிருந்தாய்....

குடைக்குள் இருந்து கத்தியது
என் மனசு
"மெதுவா.. மெதுவா..

குடைராட்டினம் என்றால்
எனக்கு பயம்.."
என்று....

*******************************

நீ இன்னும் மாற‌வேயில்லை...

எதையாவ‌துகொண்டு வ‌ந்து த‌ருவாய்
பிற‌கு திருப்பி கொடு என்பாய்...

சின்ன‌ வ‌ய‌தில் மாங்காய்த் துண்டு
இப்பொழுதோ உன் ம‌ன‌சு..

ஒரு மாறுத‌லுக்காக‌
நீ கொடுத்த‌
முத்த‌ங்க‌ளை எல்லாம் கேள்
திருப்பி கொடுத்துவிடுகிறேன்....

**************************************

உன் மனதை
என்னோடு ஒட்ட வைக்கச்சொன்னால்

நீயோ
உன் முகத்தை
ஊரில் எல்லாருக்கும்
ஒட்டிவைத்துவிட்டு போயிருக்கிறாய்....

*************************************

காத‌ல்
ஒரு பொல்லாத‌ க‌ட‌ல்...

இங்கே
அலைக‌ள் ஒவ்வொன்றுமே
வ‌லைக‌ள் தைத்து வைத்திருக்கின்ற‌ன‌....

************************************

மோதிர‌ங்க‌ளுக்காக‌வே ப‌டைக்க‌ப்ப‌ட்ட‌
நான்காவ‌து விர‌ல் மாதிரி

உன் மாலைகளுக்காக‌வே
ப‌டைக்க‌ப்ப‌ட்ட‌து
என் க‌ழுத்து.......

************************************

உன் பார்வைக‌ள்
துருவிய‌தும்
குளிர்ந்து உறைந்து விடுகிற‌தே
என் இத‌ய‌ம்....

இத‌ற்கு பெய‌ர் தான்
துருவ‌ப் பிர‌தேச‌மோ?

***********************************

என் க‌ன‌வுக‌ளில்
நீ வ‌ருவ‌த‌ற்காக‌
உன் கால்க‌ளில் க‌ட்டிக்கொண்ட‌
க‌டிகார‌த்தைத் தான்

"கொலுசு" என்று பெய‌ர் வைத்து
அழைக்கிற‌து
இந்த‌ புரியாத‌ உல‌க‌ம்.....

********************************

"க‌ட‌வுள் வ‌ந்தால்
என்ன‌ வ‌ர‌ம் கேட்பீர்க‌ள்?" என்றாய்...

"பெரிய ம‌ன‌சு" என்றேன் நான்..

தான‌த‌ரும‌ம் செய்ய‌வா என்றாய்
புரியாத‌வ‌ளாய்...

உன் சிணுங்க‌ல்,புன்ன‌கை,கோப‌ம்
என்று
நீ தந்து கொண்டேயிருக்கும்
உன் ப‌ரிசுக‌ளை
நான் வேறு எங்கு வைப்பேன்....

******************************

உன் ஒருத்தியின்
ஊரில் ம‌ட்டும் தான்..

மல‌ர்ச்செடிக‌ளும்
கைக‌ளில்
மாலைக‌ளோடு காத்திருக்கின்ற‌ன‌...

*********************************

1 comment:

Unknown said...

வலைகள் வைத்திருக்கும் அலைகள் படித்தேன், அருமை
தங்களின் அன்றாட கவிதை அலைகளை வலைமனையில் விரிக்க விரும்புகிறோம்.

வெங்கட் .